Sunday, 20 June 2021

கோயில் சொத்துக்களை அடையாளம் காண தொழில்நுட்பம்: அரசு தகவல்



 

சென்னை :கோயில் சொத்துக்களை அடையாளம் காண நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை அளித்துள்ளது.

அறநிலையத்துறை இணையதளத்தையும், முக்கிய கோயில்களின் இணையதளங்களையும் முறையாக பராமரிக்கவும், அனைத்து தகவல்களையும் இணையதளங்களில் வழங்கவும் கோரி, ஆலய வழிபடுவோர் சங்கத்தின் செயலர் ராதா ராஜன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில்களின் சொத்து விபரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன், விசாரணைக்கு வந்தது.அறநிலையத்துறைகமிஷனர் குமரகுருபரன், தாக்கல் செய்த அறிக்கை:கோயில் சொத்துக்களை அடையாளம் காண அமைக்கப்பட்ட குழுவின் பணி நடந்து கொண்டிருக்கிறது. வைரஸ் தொற்று காரணமாக, இந்தப் பணி மெதுவாக நடக்கிறது.
தொற்றுப் பணிகளில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாலும் 'சர்வேயர்' பற்றாக்குறையாலும், பணிகளை முடிப்பதற்கு நேரமாகிறது.எனவே, கோயில் சொத்துக்களை அளவிடவும், அடையாளம் காணவும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம்.



'டிரோன்' தொழில்

நுட்பத்தை பயன்படுத்தி, புவிசார் தகவல் அமைப்பை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம். ஓராண்டு, இரண்டாண்டுக்கு ஒரு முறை, தகவல்களை மேம்படுத்திக் கொள்ள முடியும்.நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், தவறுகள் குறைக்கப்படும்; துல்லியமான விபரங்கள் கிடைக்கும். பணிகளும் விரைந்து முடிக்கப்படும்.எனவே, இந்த தொழில்நுட்பத்தை கையாளுவதை ஏற்று, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையை பதிவு செய்து, விசாரணையை ஜூலை 21க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

பணக்காரர்கள் பட்டியலில் அதானி விட்ட இடத்தை பிடிப்பாரா?



latest tamil news

 புதுடில்லி : 'அதானி' நிறுவனத்தின் பங்குகள் அண்மையில் தொடர் சரிவை கண்ட நிலையில், அதன் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் சரிவைக் கண்டுள்ளது. இதையடுத்து, அவர் தற்போது வகிக்கும் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற தகுதியை இழந்து, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

'போர்ப்ஸ்' நிறுவன தரவுகளின்படி, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு, கடந்த 11ம் தேதியன்று, 9.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, 18ம் தேதியன்று, 7.90 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து உள்ளது. கிட்டத்தட்ட 1.60 லட்சம் கோடி ரூபாய் சரிவு ஏற்பட்டு உள்ளது.அதானி குழுமத்தில், 43 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும், மூன்று அன்னிய முதலீட்டாளர்களின் கணக்கு முடக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, இந்நிறுவன பங்குகள் விலை கடுமையான சரிவைக் கண்டன. இதையடுத்து, இந்த செய்தியை மறுத்து, அதானி குழுமம் அறிக்கை விட்டது.


இருப்பினும் பங்குகளை விற்கும் போக்கு பெருமளவு மட்டுப்படவில்லை. ஒரு சில தரப்பினர், அதானி நிறுவன விளக்கங்களில் முழுமையாக திருப்திஅடையவில்லை. நாளை பங்கு வர்த்தகம் மீண்டும் துவங்கும் நிலையில், அதானி குழும பங்குகள் மீளுமா அல்லது மேலும் சரியுமா என்பது தான், சந்தை முதலீட்டாளர்களிடையே எழும் கேள்வியாக இருக்கிறது.